பூமியைச் சுமக்கும் பூமனதாளர்கள் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
அனைத்துப் பூக்களும் விற்பனையாகின்ற,
கனவுகளின் கடைத்தெருவில்,
யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை...
பூக்களின் கனவுகளைப் பற்றி...
அப்படித்தான் நடக்கின்றது...
பூமனம் கொண்டவர்களின் கனவுகளும்...
எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து,
இருப்பதில் சிறப்பாய்க் கோர்த்தாலும்,
காய்ந்தபின் கழற்றியெறியப்படும்
கசங்கிய பூ மாலையாய்,
அப்புறப்படுத்தபடுகிறார்கள்
அவரவர் தேவைகள் முடிந்ததும்....
மற்றவர் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து
பூமனதாளர்களும் முற்றிலுமாய்...
அடைபட்ட வீட்டறைதனில்
அழகிய வாசம் நிறைத்தாலும்,
இடைப்பட்ட வியர்வைதனில்
இதயமயாய்த் துடித்தாலும்,
தடைபட்ட பாதைதனில்,
பாலமாய் சுமந்தாலும்,
உடைபட்ட கனவதனில்,
உருவமே கொடுத்தாலும்,
கொண்டாட்ட மேடைதனில்
பலவண்ணம் சேர்த்தாலும்,
வாசனை தீரும் முன்னே,
வழியனுப்பி வைக்கப்படும்....
காய்ந்து போன பூக்களாய்த்தான்...
காயப்பட்டு நிற்கிறார்கள்...
பூமனதாளர்களும்...
புதுயுக பூமிதனில்....
ஆனாலும்,
அடுத்த முறையும் குறைவதில்லை.....
அதன் வாசனை மட்டும்.....
பூமனதாளர்களும் அப்படித்தான்...
கசக்கி தூக்கி எறியப்பட்டயிடம்,
சாக்கடையாய் இருந்தாலும்,
அதிலும் முளைத்தெழுந்து,
அதன் வாசனையை நிரப்புகின்ற
அற்புத மலர்கள்தான்.....
பூமனம் கொண்டவர்களும்....
மற்றவர் வாழ்க்கைப் புத்தகத்தில்...
தாங்கள்
கசங்கினாலும் வதங்கினாலும்,
காயம்பட்டு முடங்கினாலும்,
வாழ்வனைத்தும் நிரப்புகிறார்கள்...
வாசனையை மட்டும்...
பூமியின் வாழ்விற்காக...
இந்த பூமனதாளர்கள்....
சிந்தித்துப் பாருங்கள்...
பூக்கள் இல்லா உலகையும்,
பூமனதாளர்கள் இல்லா வாழ்வையும்...
வழிநெடுகும் நிறைந்திருக்கும்
வெறுமையும் வேதனையும் மட்டுமே....
அதில் பயணம் செய்ய முடியுமா...
அன்றாட வாழ்விதனில்...
சிந்தைக்குப் புரிந்ததா??
மற்றவர் வாழ வாசமாகும்,
பூக்களும் வேண்டும்...
பூமனதாளர்களும் வேண்டும்...
இன்றிலிருந்து முடிவெடுங்கள்...
அவர்களின் வாழ்விலும்...
கொஞ்சம் நீர் ஊற்றுங்கள்...
வாசங்கள் அதிகமாகும்..
நம் வாழ்க்கையிலும்தான்...
வாழ்த்துகளுடன்,
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்