விமர்சனம் Vs புகழ்ச்சி: நம்மை செதுக்கும் நடுநிலை விமர்சனங்கள் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
நிலவின் நிழலொளியாய்
நல் வாழ்வின் இருபக்கம்தான்....
நிறை, குறை இரண்டும்...
புகழுரை கேட்டால்,
பூரித்து மகிழ்கிறது...
பூவாய் மலர்ந்து,
புன்னகையில் மனம்....
பாராட்டு பெறும் வேளை,
வேரோடும் சிலிர்க்கிறது...
வேறென்ன கேட்கிறது...
இன்பத்தில் இதயம்...
புகழ்ச்சி மகுடிக்கு மயங்கி,
பெருமை போதையில் கிறங்கி,
முழுதாய் ஏற்றிடும் மனம்,
முற்றிலும் முரண்படுகிறது....
தவறுகளை சுட்டிக்காட்டும் போது...
விமர்சனங்கள் வரும்போது,
வெறுத்து முறைக்கிறது...
குற்றம் குறைகளைக் கேட்டால்,
மொத்தமாய் மூடிக்கொள்கிறது...
நித்தமும் நம் மனம்...
எதிரொலிக்கும் விமர்சனங்கள்
எதிரொளிக்கும் நம் பிம்பத்தை...
எதிர்வரும் குற்றங்குறைகள்
ஏற்று சரி செய்தால்,
எளிதாக்கும் நம் பாதையை...
நம்மை செதுக்கி சிற்பமாக்கும்,
நடுநிலை விமர்சனங்களுக்கு
திறந்திரு மனக் கதவுகளை....
நாளும்... எந்நாளும்...
நிறைகளுக்கு மதிப்பளித்தால்,
புகழுரைக்கு மனமகிழ்ந்தால்,
குறைக்கும் விமர்சனத்திற்கும்
குறைவின்றி இடம் வேண்டும்...
நட்பினைக் கூட்டி,
நம் குறைகளை கழித்து,
நற்குணங்களை பெருக்கி
நம் பாதையை வகுத்தால்,
வாழ்வு இனிதாகும்...
வாழ்ந்தால் முழுமையாகும்...
சிந்தித்து செயலாற்றுங்கள்
உங்கள்,
கவிஞர் விஜயநேத்ரன்.