என் இனிய தனிமையே ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
என் இனிய தனிமையே,
என்னோடு பயணிக்கும் எனதருமைத் தனிமையே, என் உள்ளத்திலிருந்து உனக்காக எழுதுமொரு மடல். நீ எப்படி இருக்கிறாய்?. நலமா? என்று கேட்க ஆசைதான் எனக்கும். ஆனால் நீ எப்படி இருப்பாய் என்பதே இங்கே அதிசயம்தானே. பிறகெப்படி உன் நலம் அறிவது?. புற விழிகளுக்குப் புலப்படாமல் சுற்றிலும் சூழ்ந்துள்ள காற்றைப் போல, வெளியில் தெரியாவிட்டாலும் எல்லோர் வாழ்விலும் நீ நீக்கமற நிறைந்துள்ளதால், என் வார்த்தைகள் உன்னை வந்தடையும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?. நலமா?.
தேடல் நிறைந்த வாழ்க்கையில், சிலர் உன்னைத் தேடி வருகிறார்கள். சிலரை நீயே தேடிச் செல்கிறாய். எப்படி பார்த்தாலும், முடிவில் வெற்றி பெறுவது நீதான். உன்னை வெறுத்தாலும், நேசித்தாலும், தன்னிலை மாறாது உன்னிலை தொடரும் உன்னதம் நீதான்.
மன மகிழ்வில் சிலருக்கும், மனமுடைவில் சிலருக்கும் நீ நிச்சயம் தேவைப்படுகிறாய். இன்பத்திலோ, துன்பத்திலோ, இல்லை இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு சூழலிலோ, நீ நேசக்கரம் விரித்து அவர்களை அணைத்துக்கொள்வாய். அந்த அணைப்பு சிலருக்குச் சுகமாகலாம்; சிலருக்குச் சுமையாகலாம். உன் அணைப்பின் ஆழத்தில் சிக்கி, சிலர் மூழ்கலாம்; சிலர் கரையேறலாம்; சிலர் தடுமாறலாம்; சிலர் தடம் மாறலாம்; சிலர் நல்வழி தேடலாம். இப்படியாக, உன் வரவால் மாற்றம் பெறுகிறது மானிட வாழ்க்கை.
நீயோ வான்துளியாய், வளி அலையாய் மேலோர், கீழோர், நல்லவர்,கெட்டவரென்று பாகுபாடு பார்க்காமல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்பதைத் தவறாது கடைபிடித்து, உன் தராசுத்தட்டை எப்போதும் சமநிலையிலேயே வைத்துள்ளாய்.
இப்படியாக, உன் சமநிலை தவறாத பயணத்தில், ஓர்நாள் புதுமுகமாய் எனக்கும் அறிமுகமானாய் நீ..
இல்லை.. இல்லை...
எனக்கே, என்னை அறிமுகம் ஆக்கினாய்.
அறிமுகம் ஆனாய்; ஆட்கொண்டாய்; அற்புதங்கள் செய்தாய்; நம்பிக்கை தந்தாய்; நல்வொளி தந்தாய். அந்த ஒளியின் வெளிச்சத்தில் எனக்கான பாதையைச் சீராக்கி, நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட எனக்கு, ஐந்தாம் திசையைக் காட்டியது நீதான்.
ஆம். காரிருள் சூழ்ந்த கடல் நடுவே திசையறியாத் தெப்பமாய், தவித்துக் கொண்டிருந்த எனக்கு, கலங்கரை விளக்கமாய் ஒளிகாட்டி வரவேற்று, கைகாட்டியாய் வழிகாட்டி புதியதோர் உலகத்திற்கு அழைத்து சென்றதும் நீதான்.
நீ மட்டும்தான்..
என் கருப்பு வெள்ளைப் பக்கங்களுக்கு பல வண்ணம் தந்தாய்; அந்த வண்ணங்களை சிந்தையில் நல்லெண்ணங்களாக்கினாய். சிந்தையில் உதித்த அவ்வெண்ணங்களுக்கு எழுத்துரு தந்தாய்.
இப்படி எண்ணத்தை எழுத்தாக்கி, எழுத்தை சொல்லாக்கி, சொல்லை கவியாக்கி, கவிதையை மேலும் கவினாக்கி, என்னைக் கவிஞனாக்கியதும் நீதான். ஆம். அழகிய வான்வெளியில், என் கற்பனைச்சிறகுகளுக்குக் களம் கொடுத்து, சிந்தையால் சிறகடிக்க, வைத்தது உன்னையன்றி யாருமில்லை.
எனக்குள் உறங்கிய தமிழுக்கு உயிர்கொடுத்து, உயிர் கொடுத்த தமிழால் உறவமைத்து, அந்த உன்னத உறவுகளால் உற்சாகம் தந்து, ஏதுமில்லா என்னை, ஏதோவொன்றாய் உருவாக்கிய, எனதருமைத் தனிமையே, நீ யார்?.
பகுத்தறிவாளிக்குக் காற்றாக, பார்த்தறிந்தவனுக்குக் கடவுளாக, அவரவர் மனவோட்டத்திற்கு ஏற்ப, அவதாரம் எடுக்கிறாய். அவர்களுக்கும் அரிதாரம் பூசி வைக்கிறாய். ஆனால் உன்னோடு இருக்கையில் அவர் சாயம் வெளுக்கிறாய்.உன்னோடு இருக்கும்போதுதான் உண்மையை உணர்த்தி விடுகிறாய்.
ஆணுக்கும், பெண்ணுக்கும், அவர்க்கிணையான அர்த்தநாரிக்கும் அஃறிணைப் பொருளுக்கும் உண்மையை விளக்குவது நீதானே. அவரவர் யாரென்று அர்த்தங்கள் கொடுக்கும் அன்புத் தனிமையே உண்மையிலேயே, நீ அதிசயம்தான்.
அதிசயமான உன்னை முழுமையாய் உணரும் என் பேரவாவில், எனக்குள் எழுந்த கேள்விக்கு மட்டும் முழுதாயொரு பதில் கிடைக்கவில்லை. எப்படித் தேடினாலும் தொடுவானமாய்த் தொடர்ந்துதான் சென்று கொண்டிருக்கிறாய் என் மனவானில்.
இறையை உணர்ந்த சித்தனாய் இருந்தாலும், இல்லையென்றென்னும் புது வித்தனாய் இருந்தாலும், இருப்பதைத் துறந்த புத்தனாய் இருந்தாலும்,
இருப்பதெல்லாம் தனக்கென்றப் பித்தனாய் இருந்தாலும், இடைப்பட்டு தத்தளிக்கும் சாமான்யனாய் இருந்தாலும்,
உன் இருப்பை உணர்ந்தோர் பாக்கியசாலிகள் என்றே சொல்லலாம். அவர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் புரியும் அமுதசுரபி நீ என்பதை மறுக்க முடியாது.
தனிமையென்னும் நீ,
கவிஞனுக்கு கவியாகிறாய்;
காதலுக்குக் கனியாகிறாய்;
ஓவியனுக்குத் தூரிகையாகிறாய்; ஒளிபவனுக்கு சூன்யமாகிறாய்;
விஞ்ஞான யுக்தியாகிறாய்;
விரும்புவர்க்கு சக்தியாகிறாய்;
வாசிக்கத் துணையாகிறாய்;
வாழ்வுக்கு நிலையாகிறாய்;
இயற்கைக்குக் காவலாகிறாய்; இறையென்று பெயராகிறாய்;
நிறைகின்ற குடம் போல
நீ எடுக்கும் வடிவத்தால்,
இவ்வுலகோர் உணராத
இணையில்லா அதிசயமே...
நீ அதிசயமே..
நானுணர்ந்த வரையில், விடையறியாப் புதிராய் வீருநடைபோடும் நீ, மாயன் கட்டிய இந்திரபிரஸ்த மாளிகைதான் போலும்.
புறக்கண்ணால் கண்டு, புலம்பும் மானிடர்க்குப்
புதையலை மறைக்கிறாய்.
அகக்கண் கொண்டு, ஆத்மார்த்தமாய் உணர்ந்தால்,
அதிசயங்கள் புரிகிறாய்.
அதிசயங்கள் அதிசயிக்கும் அற்புதத் தனிமையே, உன்னை உணர்ந்து உன்னோடு பயணிக்கும் இந்த வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றிகள் பல கோடி...
இப்படிக்கு,
உன் வரவால் என்னை உணர்ந்த,
✍️ கவிஞர் விஜயநேத்ரன்