ரக்ஷா பந்தன் - தொப்புள் கொடி உறவைப் போற்றும் திருநாள் - கவிஞர் விஜயநேத்ரன்
அம்மையப்பன் தந்த சொந்தம்
அவருருவில் வந்த பந்தம்...
அன்பு கொண்டு நெஞ்சமதில்
அரவணைத்து தாங்கும் சந்தம்...
தோள் மீது தூக்கி வைத்து,
தோளோடு தோள் கொடுத்து,
மூத்தவராய் இளையவராய்,
முன்னிலையில் வந்து நிற்கும்.
அண்ணனாய் அக்காவாய்
ஆழ்மனதில் அன்பொழுகும்
தம்பியாய் தங்கையாய்
தாழ் நின்று தலைநிமிரும்...
தொப்புள் கொடி சொந்தமிதை
தொன்று தொட்டு வந்தயிதை
இதயம் மகிழ்ந்து கொண்டாட
இன்று நினைவூட்டிடவே
வானவில்லின் நிறமெடுத்து
வாஞ்சையுடன் கையில் கட்டி
வாழ்த்து சொல்லும் நன்னாளாம்...
ரக்ஷா பந்தன் பெருநாளாம்...
சிவப்பு மஞ்சள் நூல் கோர்த்து
சிறு சரிகை உடன் சேர்த்து
இறைவனின் அருள் கூட்டி
இதயங்கொண்ட அன்போடு
சகோதரன் கையில் சுற்றி
சகோதரி முடிச்சு போட
நான் உன்னைக் காப்பேனென்ற
உறுதியதை நெஞ்சில் நிறைத்து
இரு உயிரை இணைக்கிறது...
இன்று மீண்டும் உயிர்க்கிறது...
அன்பிலது துளிர்க்கிறது...
என்றுமதை வளர்க்கிறது....
உயிருடன் பிணைந்த
தொப்புள்கொடி மட்டுமல்ல...
உணர்வாலே இணைகின்ற
இந்நூற்கொடி பந்தம் கூட...
இதயத்தால் சொந்தம் தானே...
சகோதர திருநாள் நல்வாழ்த்துகள்...
வாழ்த்துகளுடன்...
உங்கள்
கவிஞர் விஜயநேத்ரன்